Thursday, October 3, 2013

மண்ணுக்கு உடலும், மணிக்கொடிக்கு உயிரும் தந்த குமரன்(கொடிகாத்த குமரன் )

 தடையை மீறி ஊர்வலம் சென்றபோது, கூட்டத்தை கலைக்க தடியடி நடத்தினர் காவலர்கள். அதில் படுகாயம் அடைந்தான் அந்த இளைஞன். 'வந்தே மாதரம்' என்று கூறியபடி கையில் பிடித்திருந்த தேசியக்கொடியுடன் கீழே சரிந்தான் அந்த இளைஞன். ஒருபுறம் தடியடியால் மண்டை பிளந்து ரத்தம் ஓடிக் கொண்டிருக்கிறது.

உயிருக்கு போராடிய அந்நிலையிலும், கரத்தில் பற்றிய தேசியக்கொடியை அவனது விரல்கள் பற்றியே இருந்தன. மயங்கிச் சாய்ந்த அந்த இளைஞன் பின்னர் மருத்துவமனையில் வீர மரணம் அடைந்தான். அவன் வேறு யாருமல்ல. தாயின் மணிக்கொடி காக்க உயிர் துறந்தவர் குமாரசாமி என்று அழைக்கப்பட்ட திருப்பூர் குமரன் தான். இறக்கும் தறுவாயிலும் கொடியை விடாத அவரது தேசபக்தியால்தான் கொடி காத்த குமரன் என்று இன்றும் அழைக்கப்படுகிறார்.

1904ம் ஆண்டு அக். 4ம் தேதி, தமிழகத்தின் ஈரோடு அருகிலுள்ள சென்னிமலையில், ஏழை நெசவாளர் குடும்பத்தில் குமரன் பிறந்தார். போதிய வருவாய் இன்றி குடும்பம் வறுமையில் வாடியது. எனினும் செம்மையாகவும், கவுரவமாகவும் வாழ்ந்த குமரன், 11 வயது நிரம்பிய ராமாயி என்ற பெண்ணுக்கு மணம் முடித்து வைக்கப்பட்டார்.

இளம் வயதிலேயே நாட்டுபற்று மிக்கவராகத் திகழ்ந்தார் குமரன். விடுதலை வேட்கையால் உந்தப்பட்டு திருப்பூரில் நடந்த அறப்போராட்டங்களில் கலந்து கொண்டார். பின்னர் பல போராட்டங்களுக்கு தலைமையேற்றார். கடந்த 1932ம் ஆண்டு ஜனவரியில், காந்தியடியடிகளின் சட்ட மறுப்பு இயக்கத்துக்கு ஆதரவாக வீரத்துக்கு பெயர் போன தமிழக மண்ணில் போராட்டம் நடந்தது. இதுவே குமரனின் தலையெழுத்தை தீர்மானிக்கும் சரித்திர நிகழ்வாக அமைந்தது.

திருப்பூரில் தேசபந்து இளைஞர் மன்ற உறுப்பினர்கள் அச்சமயம் ஏற்பாடு செய்த மறியல் போராட்டத்தில் தீவிரமாகப் பங்குகொண்டு கையில் தேசியக் கொடியினை ஏந்தி, தொண்டர் படைக்குத் தலைமை ஏற்று, அணிவகுத்துச் சென்றார் குமரன். காவலர்கள் தடியடி நடத்தி, துப்பாக்கி குண்டுகளை பாய்ச்சிய போதும் 'வந்தேமாதரம்... வந்தே மாதரம்...' என்று முழங்கிக் கொண்டே அவரது இறுதி மூச்சு நின்ற நாள், 1932ம் ஆண்டு ஜன. 11ம் தேதியாகும். மானம் காக்க ஆடை கொடுக்கும் திருப்பூர் நகரில், தேசிய கொடியின் இழுக்கை போக்க உயிர் துறந்தார் குமரன். அவரது மரணம், மக்களிடையே குறிப்பாக இளைஞர்களிடையே சுதந்திர வேட்கையை தூண்டியது.

ஆலமரம் கீழே விழும்போது மரம் மட்டுமே நமக்குத் தெரிகிறது. அதன் அடியில் சிக்கி சிதறிய சிறு செடிகளை எவரும் நினைப்பதில்லை. நாடு சுதந்திரமடைந்ததன் 60ம் ஆண்டு நிறைவை நாம் கொண்டாடி மகிழும் வேளையில், திருப்பூர் குமரன் போன்ற உயிர் தியாகம் புரிந்த எண்ணிலடங்காத தியாக உள்ளங்களை நன்றியுடன் நினைவு கூறுவதே நாம் அவர்களுக்கு செலுத்தும் நன்றிக் கடன் ஆகும்

Sunday, September 22, 2013

முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்கள் தமிழ் திரை வரலாற்றில் தவிர்க்க முடியாத சக்தி :

கதை / வசனம் எழுதிய திரைப்படங்கள் சில
------------------------------------------------
கண்ணம்மா
மண்ணின் மைந்தன்
பராசக்தி
புதிய பராசக்தி
மந்திரிகுமாரி
பாலைவன ரோஜாக்கள்
நீதிக்கு தண்டனை
பாசப் பறவைகள்
பாடாத தேனீக்கள்
பாலைவனப்பூக்கள்
மனோகரா
உளியின் ஓசை
பூம்புகார்
இளைஞன்
பாச கிளிகள்

மேடை நாடகங்கள் சில
------------------------
சிலப்பதிகாரம்
மணிமகுடம்
ஒரே ரத்தம்
பழனியப்பன்
தூக்கு மேடை
காகிதப்பூ
நானே அறிவாளி
வெள்ளிக்கிழமை
உதயசூரியன்

Tuesday, September 17, 2013

பொதுத்தொண்டு செய்பவனுக்கு ஏற்படும் தொல்லை அவன் தனது லட்சியத்துக்குக் கொடுக்கும் விலை.
                          -தந்தை பெரியார்

Monday, September 16, 2013

சமூக மருத்துவர் தந்தை பெரியார்


பெரியாரின் உழைப்பு, அவருடைய எண்ணம் அனைத்தும் இந்த மக்களுக்காகவே இருந்தன. ஏறத்தாடி 40 ஆண்டுகள் தன் உடல் நலத்தைப் பற்றிக் கவலைப்படாமல் வயிற்று வலியைப் பற்றிக் கவலைப்படாமல் இந்த மண்ணுக்காக மக்களுக்காகத் தினந்தோறும் உழைத்துக் கொண்டிருந்த ஒரு மாமனிதர் தந்தை பெரியார். அவர் இறந்து போய் இத்தனை ஆண்டுகள் ஆனதற்குப் பிறகும் அந்த நிகழ்வுகள் நம் நினைவுக்கு வருகின்றன.

1973 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 24 ஆம் நாள் தந்தை பெரியார் அவர்கள் மறைந்த நாள். மறைவதற்கு நான்கு நாட்களுக்கு முன்பு வரையில்கூட அவர் பொதுக்கூட்டங்களிலே பேசிக் கொண்டிருந்தார். அவர் பேசிய இறுதிக்கூட்டம் அதே டிசம்பர் மாதம் 19 ஆம் தேதி சென்னையிலே இருக்கிற தியாகராயநகரிலே நடைபெற்றது. அந்தக் கூட்டத்தில் அவருடைய பேச்சை ஒலிநாடாவிலே கேட்கிறவர்கள் ஒரு செய்தியைக் கவனிக்க முடியும். பேச்சுக்கு இடையிலே இடையிலே அவர் வயிற்று வலியாலே துன்பப்படுவதும், அந்தத் துன்பத்தை 'அம்மா அம்மா' என்கிற குரலில் அவர் வெளிப்படுத்துவதும், மிகப்பெரிய வருத்தத்தைத் தருகிற ஒரு நிகழ்வாக இருக்கும்.

அவர் அம்மா என்று ஒலி எழுப்புவதுகூட கூர்ந்து கவனித்துப் பார்த்தால், அம்மா அம்மா என்று வயிற்றுவலியால் துடிக்கிற குரலாக இருக்காது. அம்ம்மா… அம்ம்மா என்று வயிற்றுவலியை அடக்குகிற குரலாகத் தான் இருக்கும். அவர் அப்படி வயிற்று வலியை ஒரு நாற்பது நிமிடங்கள் அல்லது 4 மணி நேரங்கள் அடக்கிக் கொண்டிருந்தார் என்று நாம் கருதக் கூடாது. 40 ஆண்டுகள் அந்த வயிற்று வலியோடு அவர் போராடிக் கொண்டிருந்தார். 1930… 40களிலே எல்லாம் கூட அவர் அந்த வயிற்று வலிக்காக மருத்துவமனைகளிலே அனுமதிக்கப் பட்டிருந்ததை அவருடைய வாழ்க்கை வரலாற்று குறிப்புக்களைப் பார்க்கிறபோது நம்மால் அறிந்து கொள்ள முடிகிறது.

கடுமையான வயிற்றுவலியோடு ஏறத்தாடி 40 ஆண்டுகள் போராடிக் கொண்டு, இந்த மக்களுக்காக அறிவுப் பூர்வமாக செய்திகளையும் சொல்லிக் கொண்டிருந்த மாமனிதர் அவர். 1943ஆம் ஆண்டு அதாவது அவர் இறந்து போவதற்கு முப்பது ஆண்டுகளுக்கு முன்னால், அதே வயிற்றுவலியினால் துன்பப்பட்டு மருத்துவமனையிலே அனுமதிக்கப்பட்டிருந்தபோது அவர் என்ன செய்தார் என்பதை அன்றைக்கு அவருக்குத் தனிச் செயலாளராக இருந்த புலவர் இமயவரம்பன் அவர்கள் எழுதி வைத்திருக்கிறார்கள். 43-ஆம் ஆண்டு கடுமையான வயிற்று வலிக்காகக் சென்னையிலே இருக்கிற பொது மருத்துவமனையிலே ஐயா அவர்கள் அனுமதிக்கப்படுகிறார்கள். டாக்டர் குருசாமி முதலியார் என்ற ஒரு புகழ்பெற்ற மருத்துவர், ஐயாவினுடைய உடல் நலத்தைக் கவனித்துக் கொண்டிருக்கிறார். மிகக் கவனமாக மிகுந்த பாசத்துடன் அவரை அந்த மருத்துவர் கவனித்துக் கொண்டிருக்கிறார்.

திடீரென்று ஐயாவுக்கு நினைவு வருகிறது. நாளை சென்னையிலே இருக்கிற தியாகராய நகரில் பனகல் பூங்காவிற்கு அருகிலே ஒரு கூட்டம் இருக்கிறது. அந்தக் கூட்டத்திற்கு ஏற்கனவே அவர் ஒப்புதல் அளித்திருக்கிறார். மெதுவாக மருத்துவரை அழைத்து நான் இன்னும் எத்தனை நாள் இந்த மருத்துவமனையிலே இருக்கனுங்க… என்று கேட்கிறார். எப்படியும் ஒரு வாரமாவது நீங்க இருக்கணும், ஒரு நான்கு நாட்களாவது குறைந்தது இருக்க வேண்டியது இருக்கும் என்று சொல்கிறார்கள். அவருக்குக் கவலையாக இருக்கிறது. தோழர்கள் பணமெல்லாம் செலவு செய்து கூட்டத்தைப் பெரிய அளவிலே ஏற்பாடு செய்திருப்பார்களே, கூட்டத்திற்குப் போகாமல் எப்படி இருப்பது என்பதே அவருக்குப் பெரிய மன உளச்சலாக இருக்கிறது.

அடுத்த நாள் பெரிய மருத்துவரான டாக்டர் குருசாமி முதலியார் அவர்கள் அந்த மருத்துவமனையை விட்டுப் போனதற்குப் பிறகு, பக்குவமாக, அன்றைக்கு அங்கு மருத்துவரை அழைத்து ஒரு சின்னச் செய்தியை பெரியார் சொல்லுகிறார், "ஐயா, வீட்லே சில முக்கியமான பொருள்களையும், புத்தகத்தையும் எடுக்க வேண்டியதிருக்கு…" என்கிறார். உடனே அந்த மருத்துவர் யாரையாவது அனுப்பி எடுத்துவரச் சொல்லலாமா என்கிறார். இல்லீங்க நான் போனாத்தான் அதைக் கண்டுபிடிக்க முடியும் என்கிறார்.

“இவர் போனாத்தான் கூட்டத்திலே பேச முடியும்” அதுதான் செய்தி. நான் போனாத்தான் எடுக்க முடியும், ஆகையினால நீங்க சீப் டாக்டர் கிட்ட சொல்ல வேண்டாம் ஒரு இரண்டு மணிநேரம் ஐயா அனுமதி கொடுத்தீங்கன்னா நான் வீட்டுக்குப் போய் எடுத்துட்டு வந்தர்ரேன், ரொம்ப முக்கியமான புத்தகங்க என்று சொல்கிறார். அந்த மருத்துவருக்கு என்ன செய்வதென்று புரியவில்லை, அவர் வயதிலே இளையவர். பெரியவர் சொல்லுகிறபோது நாம் என்ன செய்வது.. சரி போயிட்டு ஒரு 2 மணி நேரத்துல வந்திருங்க என்று சொல்கிறார். நான் வந்திடுறேனுங்க. 8 மணிக்கெல்லாம் வந்திடுறேனுங்க என்று சொல்லி விட்டு அங்கிருந்து புறப்பட்டு நேராகப் பனகல் பூங்காவிற்கு வந்து கூட்டத்திலே கலந்து கொள்கிறார்.

கூட்டத்தை ஏற்பாடு செய்தவர்களுக்கும், மக்களுக்கும் பெரிய மகிழ்ச்சி… ஆரவாரம். ஐயா பெரியார் பேசுகிறார், பேசத் தொடங்கிய பிறகு அவருக்கு அந்த நேரம் காலம் எல்லாம் நினைவிலே இல்லை. பேசிக்கொண்டே இருக்கிறார். ஏறத்தாற 10 மணி ஆகிவிட்டது. திடீரென்று தனது கைக்கடிகாரத்தைப் பார்த்தபோது 10 மணி ஆகி விட்டதே என்ற பதற்றத்தோடு அந்தக் கூட்டத்தை முடித்துக் கொண்டு திரும்பவும் மருத்துவமனைக்கு வருகிறார். கொஞ்சம் தாமதமாக வந்து சேருகிறார். ஆனால் அடுத்த நாள் என்னாயிற்று என்றால், இவர் ரகசியமாக செய்த காரியம் பத்திரிகைகளிலேயெல்லாம் ஈ.வெ.ராமசாமி நாயக்கர் ஆவேசமான பேச்சு என்று செய்தியாக வெளியே வருகிறது.

அதைப் பெரிய மருத்துவர் குருசாமி முதலியார் பார்த்து விட்டு என்னடா இது, ஐயா பெரியார் மருத்துவமனையிலே இருக்கிறார். நேற்றைக்கு பனகல் பூங்காவிலே பேசினார் என்று செய்தி வருகிறதே என்று புரியாமல் மருத்துவமனைக்கு வந்து அன்றைக்குப் பொறுப்பிலே இருந்த மருத்துவரை, அந்த செவிலியர்களை எல்லாம் எப்படி நேற்று ஐயா கூட்டத்துக்குப் போனார், யார் அனுமதித்தீர்கள் என்று கேட்ட உடனே அவர்களெல்லாம் மிகவும் நடுங்கிப் போனார்கள். மருத்துவரும் மிகக் கோபமாக இருக்கிறார். ஐயாவைப் பார்க்கக்கூட வரவில்லை.

மறுபடியும் மதியம் இரண்டு மணிக்கு வருகிறபோது தந்தை பெரியார் அவர்கள் மருத்துவர் கோபமாக இருக்கிறார். மற்ற மருத்துவர்களையெல்லாம் கோபித்துக் கொண்டிருக்கிறார் என்பதைத் தெரிந்து கொண்டு, அவருடைய கைகளைப் பற்றிக் கொண்டு, "ஐயா மன்னிச்சுக்கோனுங்க… நான்தானுங்க அப்படிச் சொல்லிட்டுப் போயிட்டேன். அந்த மருத்துவர் மேல தப்பில்லீங்க… நான்தானுங்க அந்தக் கூட்டத்துக்காக அப்படி ஒரு பொய்ய சொல்லிட்டுப் போயிட்டனய்யா… ஐயா கோவிச்சுக்கக் கூடாது" என்று சொன்னபோது, குருசாமி முதலியார் சொன்னாராம் "ஐயா உண்மையிலேயே கோபப்படுவது எதற்காக என்றால் நீங்க இன்னும் ரொம்ப நாள் வாழணும். இந்த நாட்டில் நீங்கள் செய்ய வேண்டிய காரியம் ஆயிரம் இருக்கிறது.

எனவே உங்கள் உடல் நலம் பற்றிய கவலையிலதான்யா நான் சொல்றேன். உண்மையாகச் சொன்னா நான் மருத்துவரும் நீங்கள் நோயாளியுமல்ல… எனவே நீங்கள் நெடுநாள் இருக்க வேண்டும். நீங்கள் இருந்தால்தான் இந்த நாட்டுக்கும், இந்தச் சமூகத்துக்கும் நல்லது" என்று அவர் கவலைப்பட்டுச் சொல்லியுள்ளார்.

ஏறத்தாற 40 ஆண்டுகள் தன் உடல் நலத்தைப் பற்றிக் கவலைப்படாமல்… வயிற்று வலியைப் பற்றிக் கவலைப்படாமல் இந்த மண்ணுக்காக… மக்களுக்காக தினந்தோறும் உழைத்துக் கொண்டிருந்த ஒரு மாமனிதர் தந்தை பெரியார். அவர்கள் இறந்து போய் இத்தனை ஆண்டுகள் ஆனதற்குப் பிறகும் அந்த நிகழ்வுகள் நம் நினைவுக்கு வருகின்றன. அவருடைய உழைப்பு, அவருடைய எண்ணம் அனைத்தும் இந்த மக்களுக்காகவே இருந்தன. சிலர் பொய் சொல்லிவிட்டு வெளியே போவார்கள். அவர்கள் வேறு வேறு நோக்கங்களுக்காகப் போவார்கள். ஆனால் பொதுநல நோக்கத்திற்காக, மக்களுக்காக மருத்துவமனையிலேயிருந்து வெளியே வந்து பொதுக்கூட்டத்திலே பேசி விட்டு மறுபடியும் போன மனிதர் ஐயா பெரியார் அவர்களாகத் தான் இருக்க முடியும்.

(ஒன்றே சொல்! நன்றே சொல்! நூலிலிருந்து)

Wednesday, May 15, 2013

அறிவுப் பண்ணைக்குப் பணியாற்ற முன் வருபவர்களை நாடு வரவேற்பதில்லை. நையாண்டி செய்கிறது. மதிப்பளிப்பதில்லை. தொல்லை தருகிறது. எனினும் அந்த ஒரு சிலரால்தான் நாடு முன்னேறுகிறது.
-அறிஞர் அண்ணா

Saturday, April 13, 2013

தை முதல் நாள் - தமிழ்ப் புத்தாண்டு  
 -----------------------------------------------------
மலர்ந்தொளிரும் தைத் திங்கள் முதல்நாள் 2040 தமிழ்ப் புத்தாண்டு பிறக்கின்றது. அதேவேளையில், இந்தத் தமிழ்ப் புத்தாண்டு தொடர்பான வரலாற்றினைத் திரும்பிப் பார்க்க அன்போடு அழைக்கிறேன்.

கடந்த திருவள்ளுவராண்டு 2039 (அதாவது ஆங்கில ஆண்டு 2008)இல், தமிழ்நாட்டு அரசு தமிழகத்தின் ஆளுநர் வழியாகத் தைத்திங்கள் முதல் நாளே தமிழ்ப் புத்தாண்டு என உலகத்திற்கு அறிவித்தது. வரலாற்றுச் சிறப்புமிக்க இந்த அறிவிப்பை உலகத் தமிழர்கள் அனைவரும் ஒருமுகமாக வரவேற்றுப் பேருவகை அடைந்தனர்.

இந்த அறிவிப்பின் வழியாக, தமிழர்களிடையே பலகாலம் நிலவிவந்த "தமிழ்ப் புத்தாண்டு தை முதல் நாளா? அல்லது சித்திரை முதல் நாளா?" என்ற கருத்து வேறுபாட்டுக்கு முடிந்த முடிவாக ஒரு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது.

இந்த அறிவிப்புக்கு முன்பாக...

தமிழ்நாடு அரசு திருவள்ளுவர் ஆண்டுமுறையை அதிகாரப்படியாக ஏற்றுக்கொண்டு 1971ஆம் ஆண்டுமுதல் அரசு நாட்குறிப்பிலும் அதன்பின்னர் 1972 முதற்கொண்டு அரசிதழிலும் 1981 தொடங்கி அரசாங்கத் தொடர்புடைய அனைத்து அலுவல்களிலும் பின்பற்றி வந்துள்ளது.

இதற்கும் முன்பாக...

1921ஆம் ஆண்டு தமிழ்க்கடல் தவத்திரு மறைமலையடிகள் தலைமையில் 500 தமிழ் அறிஞர்கள் கலந்துகொண்ட வரலாற்றுச் சிறப்புமிக்க திருக்கூட்டம் நடத்தப்பெற்றது. சைவம், வைணவம், புத்தம், சமணம், இந்து, கிறித்துவம், முகமதியம் என எல்லா சமயங்களையும் சார்ந்த தமிழ்ப் பேரறிஞர்கள் ஒன்றுகூடி ஆய்வுமுறைகளின் அடிப்பையில் முப்பெரும் உண்மைகளை உலகத்திற்கு அறிவித்தனர்.

1.தைமுதல் நாளே தமிழாண்டுப் பிறப்பு
2.திருவள்ளுவர் பெயரில் தமிழாண்டைப் பின்பற்றுதல்
3.ஆங்கில ஆண்டுடன் (ஏசு கிறித்து பிறப்பாண்டு) 31 ஆண்டுகளைச் கூட்டித் திருவள்ளுவராண்டைக் கணக்கிட வேண்டும்.

தமிழுக்கு அரணாக இருந்துவிளங்கிய 500 தமிழறிஞர்கள் சமய வேறுபாடுகளையும் கொள்கை மாறுபாடுகளையும் மறந்துவிட்டு; ஆரியக் கலப்பையும் வடமொழிக் குறுக்கீட்டையும் உதறிவிட்டு தமிழ் ஒன்றையே முன்படுத்தி முறையான ஆய்வியல் பார்வையோடு தமிழ்ப் புத்தாண்டு அறிவிப்பை வெளியிட்டனர்.

அன்றுதொடங்கி உலகம் முழுவதுமுள்ள தமிழ்ப் பற்றாளர்கள் தை முதல் நாளையே தமிழ்ப் புத்தாண்டாக ஏற்றிப் போற்றி கொண்டாடி மகிழ்கின்றனர். தமிழாண்டு முறைப்படி தங்கள் வாழ்வியலை அமைத்துக்கொண்டு தமிழியல் நெறிப்படி வாழ்ந்தும் வருகின்றனர்.

இதற்கெல்லாம் முன்பாக...

தைப் பொங்கல் விழா நாளைத் தமிழ்ப் புத்தாண்டுத் தொடக்கமாக தமிழர்கள் பலகாலமாகக் கொண்டாடி வந்துள்ளனர். இதற்கான அகநிலைச் சான்றுகள் ஈராயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட சங்க இலக்கியங்களில் காணக் கிடைக்கின்றன.

"தைஇத் திங்கள் தண்கயம் படியும்" என்று நற்றிணையும்
"தைஇத் திங்கள் தண்ணிய தரினும்" என்று குறுந்தொகையும்
""தைஇத் திங்கள் தண்கயம் போல்" என்று புறநானூறும்
"தைஇத் திங்கள் தண்கயம் போல" என்று ஐங்குறுநூறும்
"தையில் நீராடி தவம் தலைப்படுவாயோ" என்று கலித்தொகையும்

தைத் திங்களில் புத்தாண்டு தொடங்கிய தமிழரின் வரலாற்றை இன்றும் சொல்லிக் கொண்டிருக்கின்றன. இலக்கியப் பாடல்களில் சான்றுகள் இவ்வாறு இருக்க, பாமர மக்கள் வழக்கிலும் பழமொழி வடிவத்தில் சில சான்றுகளும் இருக்கின்றன.

"தைப் பிறந்தால் வழி பிறக்கும்" என்ற பழமொழியும்
"தை மழை நெய் மழை" என்ற பழமொழியும்

தமிழர் புத்தாண்டுக்கான வரவேற்பையும் தமிழர் வாழ்வில் தைப் பிறப்புக்கு இருக்கின்ற சிறப்பிடத்தையும் பறைசாற்றுகின்றன.
மேற்சொன்ன அனைத்துக்கும் மேலாக...

உலகத்தில் இயற்கை என்று ஒன்று இருக்கின்றது. அது இயங்கிக்கொண்டே இருக்கிறது. இயற்கையின் இயக்கத்திற்கு ஏற்பவே உலகத்தின் அனைத்து நடப்புகளும் அமைகின்றன. அந்தவகையில், இயற்கைக்கும் தைப் பிறப்பிற்கும் நெருங்கிய தொடர்பு உள்ளது. தைத்திங்கள் அதாவது சுறவ மாதம் முதல் நாளில் சூரியன் வடதிசை நோக்கி தன்னுடைய பயணத்தைத் (அயணம்) தொடங்குகிறது. இதனைத் தமிழில் வடசெலவு எனவும் வடமொழியில் உத்தராயணம் என்றும் கூறுவர்.

ஆக, சூரியன் வடதிசை நோக்கிப் புறப்படும் புதிய பயணத்தைத் தொடங்கும் நாளில் தமிழர்கள் பொங்கல் வைப்பதும் அதனைச் சூரியப் பொங்கல் என்று வழங்குவதும் மிகப் பொருந்த அமைந்துள்ளன. ஆகவே, இதனைத் தமிழர்கள் ஆண்டுத் தொடக்கமாகக் கொண்டது இயற்கையின் சட்டத்திற்கும் உட்பட்டு இருப்பது கவனிக்கத்தக்கது.

இத்தனைக்கும் இடையில்...
ஆதியிலிருந்து தைத் திங்களையே தமிழ்ப் புத்தாண்டாக இருந்தாலும், இடைக்காலத்தில் சித்திரையில் தமிழ்ப் புத்தாண்டு தொடங்கிய மரபும் தமிழரிடையே இருந்துள்ளது. கி.மு 317ஆம் ஆண்டுக்குப் பின்னர் சித்திரை முதல்நாள் தமிழ்ப் புத்தாண்டாக உருவாகியது. சித்திரைப் புத்தாண்டுக் கணக்கும் தமிழருக்கு உரியதே.

பிற்காலச் சோழர் காலத்தில் சித்திரைப் புத்தாண்டுக்குப் பெரும் செல்வாக்கு ஏற்பட்டது. இதற்குக் காரணம், சோழநாட்டில் தமிழியத்தின் தலைமை கொஞ்சங் கொஞ்சமாக மாறியும் மறுவியும் திரிந்தும்போய் ஆரியப் பார்ப்பனியம் தலையெடுக்கத் தொடங்கியதுதான்.

இதனால், அதுவரை தூயத்தமிழாக இருந்த தமிழரின் வானியல் கண்டுபிடிப்புகளும், ஐந்திரக் குறிப்புகளும், நாள், நாள்மீன், பிறைநாள், திங்கள், ஓரை (ஜோதிடம், தினம், நட்சத்திரம், திதி, இராசி, மாதம்) ஆகிய அனைத்தும் வடமொழிக்கு மாற்றப்பட்டன. தமிழர் கண்ட வானியல் மரபு ஆரியமயமாக்கப்பட்டு அடியோடு மறைக்கப்பட்டது.
இதுமட்டுமல்லாது, தொல்காப்பியர் காலத்தில், அதாவது கி.மு 5ஆம் நூற்றாண்டுக்கும் கி.மு.7ஆம் நூற்றாண்டுக்கும் இடைப்பட்ட காலத்தில் ஆவணி முதல்நாளில் தமிழ்ப் புத்தாண்டு தொடங்கப்பட்டுள்ளது. தொடிதோட் செம்பியன் எனும் முசுகுந்த சோழன் என்ற மன்னன் ஆட்சிக்காலத்தில் ஆவணிப் புத்தாண்டுக்குப் முன்னுரிமை கொடுக்கப்பட்டுள்ளதாக மணிமேகலைக் காப்பியம் தெரிவிக்கின்றது.

முடிவும் விடிவும் இதுதான்!

ஓர் இடைக்கால மாற்றம் என்பதாலும், ஆரிய வலைக்குள் சிக்கிக் கொண்டதாலும், மீட்க முடியாத அளவுக்குக் கலப்படம் நேர்ந்துவிட்டதாலும், பார்ப்பனியக் கூறுகளும் மத ஊடுறுவல்களும் அளவுக்கதிமாக நேர்ந்துவிட்டதாலும் சித்திரையைத் தமிழ்ப் புத்தாண்டாக ஏற்கமுடியாது என 1921இல் 500 தமிழறிஞர்கள் எடுத்த முடிவு முற்றிலும் சரியானதே என்பதை ஆய்வுப்பார்வையும் அறிவுநோக்கும் கொண்ட எவரும் ஒப்புவர். அதுபோலவே ஆவணிப் புத்தாண்டும் வழக்கற்றுப் போனதோடு காலச்சூழலும் மாறிப்போய்விட்டது.

இந்நிலையில், அகநிலையிலும் புறநிலையிலும் தமிழர்கள் விடுதலை பெற்ற இனமாக வாழவும் உயரவும் தனித்திலங்கவும் தைப்பிறப்பையே தமிழாண்டுப் பிறப்பாக – தமிழ்ப் புத்தாண்டாகக் கொண்டாட வேண்டும் என்பது காலத்தின் கட்டாயம்! கடவுளின் தீர்ப்பு!
உலகின் பழமையான இனமாகிய தமிழினம் தலைநிமிர்ந்து வாழ வேண்டுமானால், தமிழரின் வாழ்வியல் தமிழியலைச் சார்ந்திருக்க வேண்டும்; தமிழியத்தின் விழுமியங்களைத் தாங்கியிருக்க வேண்டும்; தமிழிய மரபுவேர்களில் எழுந்துநிற்க வேண்டும். இந்த முடிவொன்றே தமிழருக்கு விடிவாக அமையும்.